சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Sunday 16 February 2014

ஏக்டி பாஙாலி அக்கர்! ஏக்டி பாஙாலி ப்ராண்!

 
 (குறிப்பு;-15-3-1975ஆம் நாளிட்ட பாஷாபிமானி முதல் இதழில்-என்னால் எழுதப்பட்டுப் பிரசுரமான இக்கட்டுரையை உங்கள் பார்வைக்குப் படைக்கிறேன்.நன்றி)

மொழி என்பது சிந்தனைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் துணை நிற்கக்கூடிய ஒரு கருவி.இன்னமும் கூறப்புகின் மனித உணர்வின் உணவு எனலாகும்.மொழி உருவாகத் தேவை சொற்கள். சொற்களாவது ஒலியினது சேர்க்கை. இதனை நன்னூலார் "மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து-(நன்னூல்-எழுத்தியல்-நூற்பா-58.) என்பார். இஃதென்னையோவெனின், "மொழி முதற் காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து’’-என்றவாறு எழுத்திற்கு இலக்கணம் சுட்டினார் என்ப. இதனுள்ளும்,’’அணுத்திரள் ஒலி எழுத்து- என்று கூறாது "மொழி முதற் காரணமாம்’ “-என்று சிறப்பித்தோதிய தென்னையோவெனின்; "முற்கு,வீளை" (முற்கு=இருமல் , வீளை=விசில்ஒலி) முதலியவற்றிற்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலி எழுத்தாகாமையின் "மொழி முதற் காரணமாம் ஒலி " என்னும் மிகையானே விதந்துரைத்தார் என்க.

உரைக்கவே, மொழிக்கும் எழுத்திற்கும் உள்ள உறவு உணர்த்த லாயிற்று. மொழியின் ஒரு கூறாகிய ஒலி(பேச்சு) கட்புலனாகா மையின்,ஒலிக்கு உருவம் சமைத்து எழுத்தாக்கினார் என்ப. ஆக்கவே, மொழியின் உயிர்- ஒலியாம் உரையும், மொழியின் உடல் எழுத்தாம் வரிவடிவம் ஆயிற்று. ஆயினமையால் மொழியின் எழுத்தினை நீக்குவ தென்பது உடலினை அழித்திடும் "கொலைத்தொழிலுக்கு" ஒப்பவாம் என்ப. அல்லாமலும் 'கண்ணன்'-என்று குறிப்பிடுங்கால் அது கண்ணனது உயிரைக் குறிப்பிடுமா?-அன்றி கண்ணனின் உடலைக் குறிப்பிடுமா?- என்றறிதல் வேண்டும். கண்ணன் என்பதோ உயிரும்- உடலும் கலந்த ஒருவனையேக் குறிப்பிடுமேயன்றி அவனு உயிரை மட்டும் அல்லது அவனது உடலை மட்டும் குறிப்பிடாதென்பது தெரிதருதேற்றம். அஃதென்னையோவெனின் உடல் நீங்கிய உயிர் மட்டுமே எனின் அதனை உலகத்தார் ‘கண்ணன்-என விளித்திடார்; மாறாக 'ஆவி,பேய்' - எனப் பல்லாற்றானுமே பகர்வாராயின்.உடல் மட்டுமோ எனின் அதனையும் 'பிணம்' - என்ற சொல்லாலேயே குறிப்பரேயன்றி கண்ணன் - என்று விளித்திடார். இவ்வுலக இயல்பானே மொழியாவது உரையும் எழுத்தும் விரவியதொரு நிலை என்பது பெற்றித்தாம். பெறவே, ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளிய, "பா4ஷா ப4க்தி நீ:ஸ்தெனொ பா4த் நீ:ஸ்தெ பொ4ன்னொ- என்பதனுள் குறிக்கப் பெற்ற பா4ஷா-என்பதும் ஒலியும் எழுத்தும் விரவிய நிலையையே குறித்தார் என்க. அல்லாமலும், "சோறு உண்" என்பார் சோற்றினை மட்டும் இடாது அதற்கு உடனாய குழம்பு, ரசம், தயிர் - போன்றனவும் இடுவதே போன்று - சோறு என்பது சோற்றை மட்டும் குறிக்காது மேற்கூறிப்போந்த பிறவும் குறித்தாற் போன்று - பாஷை என்பது ஒலியும்- அதன் விழியாய எழுத்தும் குறித்தார் என்க.

இனி, எழுத்தாவது அஃதென்னையோவெனின் கூறுதும், எழுத்து என்பார் ஈரெழுத்தினைக் காட்டுவாராயினர். அதனுள் 1) தேவநாகரி என்ப தொன்று, 2) ஸௌராஷ்ட்ர எழுத்து என்ப தொன்றுமாம். இதனுள்ளும் பேரறிவு படைத்த ஸௌராஷ்ட்ர மொழி ஆராய்ச்சியாளருள் (ஸௌராஷ்ட்ர மணி தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்ட இருவருள்) ஒருவர் தேவநாகரி என்பதோர் எழுத்து ஸௌராஷ்ட்ரப் பிரதேசத்தில் பிறந்தது என்று தமது மதிப்பிற்குரிய-நாகரிகம் மிகுந்த கட்டுரை ஒன்றில் கூறினார் என்க. நம் சொந்த மண்ணில் பிறந்த எழுத்தேயாகலின் - அரைகுறை - உரைக்கும், கவிக்கும், யாப்பிற்கும் பொருள் காணமாட்டாது, இருளில் விளக்கேந்தி நிற்கும் குருடன் போல்-புலவர் எனக் கூறிக்கொள்ளும்-இளம் புலவனான-இப்பாமரன் தேவநாகரியிலேயே இனி, அடியேனின் அன்னை மொழியினை எழுதுவதென்று முடிவு செய்தானாக. செய்தக்கால் வடமொழி இலக்கிய,புராண, வேத, வேதாந்தங்களின் துறைபோய அறிஞரானஆச்சாரிய விநோபாபாவே அவர்கள் ‘காந்திமார்க்-ஹிந்தி அக்.,74-இதழில் எழுதிய கட்டுரை ஒன்றைத் துரதிர்ஷ்டவசமாய்க் கண்டிட நேர்ந்தது.அது,இது:-

"மொழியைப் போல் எழுத்தும் உணர்ச்சிபூர்வமான பொருள். ஆகையால் இதைக் கட்டாயமாகவோ, வற்புறுத்தலாகவோ அறிமுகப் படுத்த நான் விரும்பவில்லை.-என்றவாறு கூறிப்போந்த ஆச்சாரியர் தொடர்ந்து தேவநாகரியின் பிறப்பைக் கூறுவாராயினார். அஃதென்னையோ வெனின் காட்டுதும்-

தேவநாகரி என்று இதற்கு எப்படிப் பெயர் வந்த்து?

"வடமொழியில் காசிமாநகருக்கு, 'தேவநகர்' -என்று பெயர். முன்பு பிராமி லிபியின் பல வடிவங்களைப் பயன் படுத்தி வந்த வட்டார மொழியினர் யாவரும் காசிமாநகருள் ஒன்றுகூடினார்கள். ஒரு பொது லிபியை ஏற்க வேண்டும் என்று முடிவாயிற்று. பலவகை லிபி வடிவங்களையும் ஆராய்ந்து இறுதியாக, இந்த நாகரி லிபியை உருவாக்கினார்கள். அதையே வடஇந்திய வட்டார மொழிகளுக்கும் பண்டிதர் மொழியாகிய ஸமஸ்கிருதத்திற்கும் பொது எழுத்தாகவே ஏற்றுக் கொண்டார்கள்.- (ஆதாரம் :- மஞ்சரி-ஜனவரி1975-பாவே எழுதிய கட்டுரை).

ஆச்சாரியா விநோபாபாவேயின் கூற்றினை நோக்குங்கால், "தேவநாகரி என்பது வட்டார மொழியினர் சிலர் காசியின்கண் ஒருங்கே கூடி பல மொழிகளின் பல வடிவங்களையும் ஆராய்ந்து தொகுத்தே, 'தேவநாகரி' - என்ற வரிவடிவினை ஆக்கினர் என்பது பெற்றாம். பெறவே, இதன்கண் பயன் யாதோவெனின் கூறுதும், பாரதநாட்டின்கண் சிற்சில மொழியினர் தமக்குரிய வரிவடிவமின்றி அவதியுறுவார் - இதனைப்பெற்றுத் தம் மொழிக்கு உருசமைத்திடலாம் என்பது குறியாம். குறியாகவே, தேவநாகரி என்பது, விழியிலார்க்கு விழிதந்திடும் நிறுவனம் போலாயது என்பது வெள்ளிடைமலை. அல்லாமலும், இது பல மொழி எழுத்துகளின் சேர்க்கையே அன்றி(ஸௌராஷ்ட்ர மொழி ஆராய்ச்சியாளரான என் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ மாமேதையின் வழியிற் கூறின் எழுத்துத் திருட்டாம் திரட்டேயன்றி) வேறன்று என்பதும் பெற்றாம்.எனவே கூறுதும், விழியிலார் அவ்விரவல்-(திருட்டு)விழியைப் பெறட்டும். விழியுடைய நமக்கு அஃதெற்றுக்கு?திருட்டு விழி திருட்டு முழியைத்தான் தரும் என்பது உலகிடை வாழ்வோர் உணர்ந்தனவேயாம் என்க.

இறுதியாக, மஞ்சரி ஜனவரி1975 இதழில் டாக்டர் ப்ரபாகர் மாச்வே என்பார் எழுதிய, 'பங்களாதேஷ் இலக்கியம்' -என்றிட்டு வந்துற்ற கட்டுரையின் ஒரு பகுதியினைக்காட்டி இதனை முடிப்பேனாக :-

"இரவு-12 மணியிலிருந்து இலக்கிய விழாவைப் பற்றிய தொலைக்காட்சிகளை டாக்கா டெலிவிஷன் நிலையத்திலிருந்து ஒலி பரப்பினார்கள். இரவு முற்றும் என்னால் விழித்திருக்கத்தான் இயலவில்லை. அதிகாலையில் அகாதமியின் பிரதமச் செயலாளர் எங்களுக்கு இரு மலர் வளையங்களைத் தந்து, மறைந்த இலக்கிய வாதிகளின் சமாதியில் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். சமாதிக்கு, ‘ஷஹீத்மீலார்-என்று பெயர். பின்பு ஏராளமான பதிப்புகளையும் வாசகங்களையும் தாங்கியதொரு பிரமாண்டமான ஊர்வலம் இங்கிருந்து புறப்பட்டது. "ஏக்டி பாஙாலி அக்கர்! ஏக்டி பாஙாலி ப்ராண்" (ஒவ்வொரு வங்கமொழி எழுத்துக்குமாக ஒவ்வொரு வங்காளியும் உயிர்த்தியாகம் புரியக் கடமைப்பட்டவன்.) என்ற ஒலிகள் கோஷங்களாக மாறி வானைப் பிளந்தன!

இந்த வங்க உணர்வு என்றன் தங்கச் ஸௌராஷ்ட்ரருக்கு உதித்திடும் நாளே ஸௌராஷ்ட்ர அன்னைதம் எழிலைக் காத்திடக் கங்கணம் கட்டிடும் நாளாம் என்க.   

No comments:

Post a Comment